Tuesday, November 15, 2011

சுயசரிதை ரொம்ப முக்கியம் நண்பர்களே!!!

மிக சிறந்த நாவல் படிக்க போகிறீர்களா? போய் முதலாவதாக வாங்குங்கள் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' எழுதியவர்- அ.முத்துலிங்கம். ஈழத்து புலம்பெயர் எழுத்தாளரான இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். 1964 ல் அக்கா என்ற சிறுகதை நூலில் தொடங்கி திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்குவீதி, மகாராஜாவின் ரயில்வண்டி, அ.முத்துலிங்கம் கதைகள், அங்கே இப்ப என்ன நேரம், பூமியின் பாதிவயது என்ற வரிசையில் உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற நாவல் 2008 ல் வெளியிடப்பட்டது. உயிர்மை பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது. 
ஆசிரியர் உரையினை காலநதி என்ற பெயரில் எழுதியது தொடக்கம் ஒவ்வொரு வரியும் நகைச்சுவையும் உண்மையும்!!! ததும்பும் வண்ணம் காணப்படுகின்றது. அவனவன் எவ்வாறு சுயசரிதை எழுதுகிறான் என்பதை காலநதியில் கூறுவதை வாசித்த பின் யாரும் முழுமையாக இப்புத்தகத்தை வாசிக்காமல் விடமாட்டார்கள்.

இப்புத்தகத்தை படித்தபின் நீங்களும் சுயசரிதை எழுத தொடங்கி விடுவீர்கள்.

பெண்கள் தான் செருப்பால் அடிப்பார்கள்

இந்த உலகம் முழுக்க பேமஸ் ஆன ஒரு வேட் எண்டால் அது 'நான் உன்னை காதலிக்கிறேன்'. அதுதான் I Love You.... எல்லா நாட்டிலயும் இத சொல்லாதவங்கள பாக்க முடியாது. 
உங்கள் காதலி அல்லது காதலனை மடக்க சூப்பர் ஐடியா இதுதான். தமிழ் அல்லது ஆங்கிலத்தை தவிர வேறு என்ன மொழி உங்கள் காதலருக்கு பிடிக்கும் என கண்டுபிடித்து அம்மொழியில் காதலை சொல்லி மடக்கிடலாம்.
நான் கேள்விப்பட்ட சிலமொழிகளில் சொல்லித்தருகிறேன். முயற்சித்து பாருங்கள். சிலவேளை நான் சொன்னது பிழையானால் சரியான மொழிபெயர்ப்பை கருத்துரையில் தருக...

Hindi
" Hum Tumhe Pyar Karte hae "

Greek
" S'agapo "

Japanese
" Aishiteru / Anata ga daisuki desu "

Latin
" Te amo "

Telugu
" Nenu ninnu premistunnanu "

Thai (to Male)
" Chan rak khun "

Spanish
" Te quiero "

ஏதாவது எக்குத்தப்பா செருப்பை கழட்டினா திரும்பி பாக்காமல் ஒரே ஓட்டமா ஓடிவந்திடுங்க....( பெண்கள் தான் செருப்பால் அடிப்பார்கள்... ஆண்கள் தியாகிகள் மாதிரி வானத்தை பாத்து சிரிச்சிக்கிட்டு இருப்பாங்க....நான் சொன்னது சரி தானே நண்பர்களே)

இலங்கையின் இயற்கை கொடை

15.07.2010 அன்று தெ.மகாஜனக்கல்லூரி மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கராஜவனத்திற்கான கல்விச்சுற்றுலாவின்போது ஏற்பட்ட அனுபவபகிர்வே இது.

நீங்களும் சிங்கராஜாக்கு செல்லலாம். காட்டின் உட்பகுதிக்கு செல்லமுன் ஒரு சிறிய அறிவுறுத்தல். செல்லமுன் உயில் எழுதிவிட்டு செல்லவும்.

காட்டுக்கு சென்ற குழு

சரத் கொட்டகமவுடன் நான்

கடந்த மூன்று வருடங்களாக இச்செயற்திட்டம் இடம்பெற்ற போதும் இரண்டாவது வருடமே தமிழ் பாடசாலைகளுக்கு இவ் அனுமதி கிடைத்தது. இதிலே யாழ் மாவட்டத்திலிருந்து முதலாவது பாடசாலையாக நாம் சென்றிருந்தோம். இதற்கு வடக்கு கிழக்கு இணைப்பாளர் திரு அசோகன் அவர்கள் பெரிதும் உதவிபுரிந்தார்.
15.07.2010 காலை யாழ்ப்பாணத்திலிருந்து காலை 5.00 மணிக்கு ஆரம்பித்த பயணம் பளை - பரந்தன் - முறிகண்டி - ஓமந்தை வழியே வவுனியா வந்து கொஞ்சநேரம் நின்று மீண்டும் 10.45 மணியளவில் கலவான நோக்கி பயணப்பட்டு சிங்கராஜவின் ஆரம்பத்தை இரவு 8.15 அளவில் அடைந்தது. 


இதிலிருந்தே தடைசெய்யப்பட்ட காடு ஆரம்பமாகிறது. யாரும் உட்புகமுடியாத இடம்.(எம்மை தவிர)

 சிங்கராஜவை அடைந்த பின் பின்னர் காட்டின் நடுவே அமைந்த தங்குமிடத்தை அடைவதற்கான பயணத்தை ஆரம்பித்தோம். முன்னரே ரோச் லைட் கொண்டு வரும்படி அறிவித்ததால் நடைபயணம் இலகுவாக அமைந்தது. சலசலக்கும் நீர்வீழ்ச்சி, பலவித உயரங்களிலமைந்த மரங்கள், என்ன விலங்கின் ஒலி, பறவையின் ஒலியென்று கண்டுபிடிக்க முடியாதவாறு பலவித ஒலிகளும் பயத்தை ஏற்படுத்தின. எமக்கு தக்க உதவிகளை செய்து ஆலோசனைகள் வழங்கிய அசோகன் (வடக்கு கிழக்கு இணைப்பாளர்) வழிகாட்டியாய் எமக்கு உதவிய பிரதீப் சுரங்க (Education Officer, Field Ornithology Group of Srilanka, Colombo University) போன்றோர் எம்முடன் வந்து நீர்வீழ்ச்சிகளை பற்றியும், ஒலிகளை வைத்து பறவை, விலங்கை இனங்காணும் முறைகளை விளக்கினர்.கிட்டத்தட்ட 4Km சென்றபோது மரத்தாலே செய்யப்பட்ட 2 மாடிகட்டடம் தென்பட்டது. கொங்கிறீட் கட்டடத்தை விட அழகாகவும் உறுதியாகவும் அமைக்கப்பட்ட அந்த வீட்டை என்றும் மறக்கமுடியாது.மேலும் 6-7Km மலைப்பாதையில் நடந்து தங்குமிடத்தை அடையும் போது எமக்கு என்றும் மறக்கமுடியாத அனுபவம் ஏற்பட்டது. அங்கு மிகபெரிய சூழலியல் விஞ்ஞானியான சரத் கொட்டகம(Professor of Environmental Science, Department of Zoology, University of Colombo.) எமக்காக காத்திருந்தார்.அன்று இரவு உணவை முடித்ததும் விரிவுரை ஆரம்பம் ஆனது. முதல்ல சொன்னது காலை 5.00 மணிக்கு எழும்பி 6.00 மணிக்குள்ள விரிவுரைக்கு வரவேணுமிண்டுறதுதான். அடுத்தநாள் 






16.07.2010 எமது வேலை ஆரம்பமானது. காலை விரிவுரையில கொட்டகம சேர் காடழிப்பை தடுப்பதன் அவசியத்தையும் நாம் செய்யவேண்டிய காரியங்களையும் கூறினார். பிறகு எமக்கென்று அமைக்கப்பட்ட உடைகளை அணிந்து காட்டுக்குள் புறப்பட்டோம். அட்டை (ரத்தம் உறுஞ்சும் அட்டை) கடியை தடுப்பதற்கு விசேடமாக அமைக்கப்பட்ட காலுறைகளை அணிந்து புறப்பட்டோம். அன்று நீர்வீழ்ச்சிகளை, புது வித பூக்கள், பாம்பு, பறவை என்பவற்றை பார்வையிட்ட படி சிங்கராஜவின் MULAWELLA NATURE TRAIL ல் கிட்டத்தட்ட 700m க்கு மேல் ஏறினோம். உயிருக்கு ஆபத்தான பாதை. ஏனெனில் குத்தான சாய்வு பாதை. மேலும் அதிகளவு மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் 760m க்கு செல்லாமல் 700m உடன் திரும்பினோம். அசோகன் சேரிடம் மேலே என்ன உள்ளதென கேட்டபோது கட்டையான மரங்களும் கற்பாறைகளும் காணப்படுமென கூறினார். மேலும் இச்சிகரத்தில் நின்று வடமேற்கே பார்த்தால் புத்தளம் வெளிச்ச விளக்கு தெரியுமெண்டது இப்பவும் நம்பமுடியாமலிருக்குது. பிறகு தங்குமிடம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம். பிறகு அன்றைய தினத்தை விரிவுரையுடன் கழித்தோம்.






17.07.2010 சனிக்கிழமை பறவைகளின் நடத்தை கோலங்களை ஆராய்வதற்காக சென்றோம். பலவிதமான பறவைகளை கண்டதுடன் Sarath Kumaragae (Forest Officer,Forest Department, Sinharaja Forest) அவர்களின் காடழிப்பை தடுப்பது, சிங்கராஜவனத்தின் வரலாறு, அங்கு காணப்படும் கிராமவாசிகளின் செயற்பாடு பற்றி விரிவுரை இடம்பெற்றது. மீண்டும் பறவைகளை பார்வையிட அதற்கென காணப்படும் மலையில் ஏறினோம். அங்கு லால் (B.Sc, Research Officer of Field Ornithology Group of Srilanka, Zoology Department, Colombo University) அவர்கள் பறவைகளை இனம்காணல் பற்றியும் அவற்றின் நடத்தை பற்றியும் அறிவுறுத்தினார். ஆங்கே பல பறவைகளை பார்வையிட்டு திரும்பும் வழியில்; GIANT NAWADA TREE ஐ பார்வையிட்டோம். தமிழில் இது ராட்சத குங்கிலிய மரம் எனப்படும். 43m உயரமானது. இந்த வகை மரமே உலகிலே உயர்ந்த மரத்தின் வகையை சேர்ந்தது. 6.3m சுற்றளவு கொண்டது.அதன்பின் அங்கே காணப்படும் வானிலை அவதானநிலையமும் மீன் வளர்ப்பு நிலையமும் அமைந்த கட்டடதொகுதிக்கு சென்றோம். அங்கே சிறிது நேரம் அவ்அவதான நிலையத்தின் செயற்பாடு பற்றியும் அதுவரை பார்த்த விலங்குகள் பற்றியும் கதைத்தோம்.மாலையில் மீண்டும் களபயணத்தில் பாம்பு, பறவை போன்றவற்றை பார்த்தபடி மலையேறினோம் தொடர்ச்சியான மழைக்கிடையே எமது களபயணத்தை சிறப்பாக முடித்து மாலையில் செயற்திட்டம் செய்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டோம். அதுவரை கண்ட, கேள்விப்பட்ட விடயங்களை செயற்திட்டத்தில் பதிந்து 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை சரத்.கொட்டகம அவர்களிடம் சமர்ப்பித்தோம். அதன் பின் இக்கல்விபட்டறையில் கலந்து கொண்டமைக்காக இலங்கை களப்பறவையியல் குழவினால் வழங்கப்படும் சான்றிதழுடன் சூழல் பாதுகாப்பு நல்லெண்ண தூதுவர்கள் என்ற பட்டத்துடன் யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தோம்.

ஸ்ரீலங்கா புளூ மக்பீ பறவை




GIANT NAWADA TREE

இரத்தம் உறுஞ்சும் அட்டை. முதலில் சிறிதாயிருந்தது இரத்தம் குடித்தபின் எவ்வளவு மொத்தமானது என்று பார்க்கவும்.





இனி சிங்கராஜ பற்றிய விளக்கம் இதோ.......
சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சப்ரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300m தொடக்கம் 1170m உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக (World Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளிடையே மிக பிரசித்தமான தளங்களில் ஒன்றாகும். ஆனால் பயணிகள் தங்குமிடத்திலிருந்து குறிப்பிட்ட இளவு தூரமே செல்லமுடியும். இது 1876 ல் ஒதுக்கப்பட்ட வனமாக பிரித்தானிய அரசால் அறிவிக்கப்பட்டது. இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், இலங்கைத் தரிசு நிலச்சட்டத்தின் கீழ் 4046 ஆம் இலக்க 
அரசிதலின் படி சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. 1960 ல் ஏற்பட்ட மரதேவைக்காக 35% வனப்பகுதி இங்கு அழிக்கப்பட்டது. ஆனாலும் மீளவனமாக்கப்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது.ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1977ல் ஜெயவர்த்தன சிங்கராஜவில் குறிப்பிட்ட பகுதியில் மரங்களை வெட்ட அனுமதியளித்தார். அப்பகுதியில் மீள்காடாக்கம் இடம் பெற்றது. இதன் மூலம் தேவையற்ற மரங்கள் நீக்கப்பட்டன.1988 அக்டோபர் 21 ஆம் நாள் 528.14 அரசியல்யாப்பின் படி, 7,648.2 ஹெக்டயார் பரப்பளவு இலங்கையின் தேசிய உரிமை காடாக இது அறிவிக்கப்பட்டது. இதே ஆண்டு யுனெஸ்கோ 6,092 ஹெக்டயார் காட்டு ஒதுக்கீடு மற்றும் 2,772 ஹெக்டயார் முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய 8,864 ஹெக்டயார் பரப்பளவை உலக உரிமைத் தளமாக அறிவித்ததுஇது இலங்கையின் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனப்பகுதியில் ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 23.6 செல்சியஸ் ஆகும். மே தொடக்கம் யூலை வரை தென்மேற்குப் பருவப் காற்று மூலமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவப் காற்று மூலமும் இக்காடு மழையைப் பெறுகின்றது. ஆண்டுக்கு சராசரியாக 2500 மில்லிமீட்டர் மழை இங்கே பொழிகின்றது. இங்கு திசையறி கருசிகள் வேலைசெய்யாது. இப்பகுதியில் காந்தவிசை காணப்படாததே இதற்கு காரணம்.

இங்கு காணப்படும் விலங்கு வகைகள் சில- 
Bees-148 வகை
Dragonflies-120 வகை
Amphibious – 44 வகை
Ants- 181 வகை
Birds-492 வகை (33 இலங்கைக்குரிய வகைகள்)

17% Amphibious காடழிப்பால் அழிவடைந்து விட்டது. எஞ்சியவற்றில் 4% சிங்கராஜவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது.

Monday, November 14, 2011

இலங்கையின் கல்விமுறை ஆரம்பம்: ஆய்வுகட்டுரை

கல்வி என்னும் ஒளிவிளக்கை ஏற்றிவைக்கும் சமுதாயத்தில் அறியாமை என்னும் இருள் விலகிநிற்கும். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகளைக் கூட ஏற்றலாம். அவ்விதமே ஒருவர் பெறும் கல்வியானது அவருக்கு மட்டுமன்றி முழுச்சமூகத்திற்குமே நன்மைகளை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் தான் 'அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதலிலும் பார்க்க ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது உத்தமம்' என்று அறிஞர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். கற்றறிந்தவனுக்கு தன்ஊரில் மட்டுமன்றிச் சென்ற ஊர்களிலெல்லாம் சிறப்புகள் ஏற்படும் என்று திறந்தநிலைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கல்வி என்னும் பெருஞ்செல்வத்தைப் பெறுவதற்காக அக்காலத்திலிருந்து இக்காலம் வரை பல்வேறு சாதனங்களை மனிதன் உருவாக்கியுள்ளான். குகைகளில் வாழ்ந்த மனிதன் இன்று ஏனைய கோள்களிலும் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சி வரை முன்னேறியுள்ளான். குகைகளில் கோடுகள், குறியீடுகள் எனத் தொடங்கிய எழுத்துப்பயணம் கணனிமொழிகள் வரை பல்வேறு ஊடகங்களினூடாக சென்று கொண்டிருக்கிறது. எண்ணங்களை, அனுபவங்களை, கண்டுபிடிப்புக்களை அடுத்தவருக்கு கூறப்பயன்படுத்திய சாதனங்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல்வேறு காரணங்களால் அழிவடையக் கூடியனவாக இருந்தாலும் பெறப்பட்ட அறிவை அடுத்தவருக்கு வழங்கும் செயற்பாடு நின்றுவிடாமல் தொடர்கின்றது.

வரிவடிவக் கல்வி, வாய்மொழிக் கல்வி என்னும் வரிசையில் பல்வேறு சாதனங்கள் கல், களிமண், தோல்கள், பலகைகள், இலைகள், புல்வகைகள், உலோகத்தகடுகள் எனப் பதிவுகளை மேற்கொள்ளப் பயன்பட்டன. அச்சுயற்திரம், காகிதம் என்பவற்றின் கண்டுபிடிப்புகளின் பின் நூல்கள் உருவாகின. இந்நூந்களினூடாக ஒரே சமயத்தில் பலரும் பல இடங்களிலும் அறிவைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகியது. நூல்கள் பெருகப்பெருக அவற்றை பெற்று பயன்படுத்தியவர்கள் அதனை பேணிப் பாதுகாக்கத் தலைப்பட, நூலகங்கள் என்னும் புதிய சிந்தனையும் பிறந்தது. சமயநிறுவனங்கள் தொடங்கி கல்விநிறுவனங்கள் வரை நூலகத்தின் செல்வாக்கு விரிவுபட்டது. கற்பதற்கு நூல்களின் அவசியம் உணரப்பட, கற்பவர் தொகையும் அதிகரிக்க நூல்கள் பலதுறைகளிலும் வெளிவரலாயின. எல்லோருக்கும் எல்லா நூல்களும் கிடைக்க வாய்ப்பிருக்காது. நூல்களின் வியாபகம், பரவல், என்பவற்றுடன் அதன் உற்பத்தி செலவுகளுக்கான விலையும் சம்பந்தப்பட்டுள்ளது. இலவசமாகக் சிடைக்கும் வாய்ப்பிருந்தால் சகலருக்கும் பயன்படும் என்ற நிலை உருவாக நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளினூடாக நூலக சேவைகள் வழங்கப்படும் வழக்கம் மேல்நாடுகளில் ஆரம்பமாகியது.
குருகுலக்கல்வி முறை நிலவிய காலத்திலும் கல்வி கற்பிக்கும் பணிக்காகவே உருவாகியுள்ள கல்வி நிறுவன முறையுடைய இக்காலத்திலும் கற்பித்தலுக்கும் கற்பித்தலுக்குமான ஏடுகள், நூல்கள் என்பன அப்பணியில் ஈடுபடுவோருக்கு எளிதில் கிடைத்தல் வேண்டும். இதற்கான சகல சாத்தியப்பாடுகளையும் உடைய நிறுவங்களாக நூலகங்கள் அமைகின்றன.

திண்ணைப்பள்ளிகள் மூலமும் குரு-சிஷ;யமுறையிலும் அறிவின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டாலும் ஒருவன் தானே அவற்றை உள்வாங்கி விருத்தி செய்வதன் ஊடாகவே கல்வியின் பயனைப் பெறமுடியும். இலங்கையில் மேனாட்டாரின் வருகையுடன் அச்சுயந்திரம், கல்விமுறைமைகள், நூல்கள் என்பன அறிமுகமாயின. கல்வி ஒரு சிலரின் சொத்தாகவே விளங்கிய காலகட்டத்தில் மேனாட்டாரின் முயற்சிகள் முழு இலங்கையிலும் கல்வியைப் பெறவேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. சுமயத்தின் ஊடாகவும் சமூகத்தின் பல நிலைப்பட்டவர்களிடையே மேனாட்டாரின் பணிகள் ஊடுருவின.
இனி நாட்டின் தேசிய இனங்களிடையே மேனாட்டவரின் கல்வி நிறுவனங்கள், சமயநிறுவனங்கள் பெரும் புரட்சியை உருவாக்கின. தமது மொழி, சமயம், கலாசாரத்தன்மை இவற்றில் குறுக்கீடு செய்த செயல்களினை ஒரு காலகட்டத்தில் பொறுக்க முடியாதநிலை உருவாகியது. மேனாட்டார் செய்த சமயப் பிரச்சார உத்திகள் கல்விநிறுவன அமைப்புகள் போன்று சுதேச மக்களாகிய அறிஞர்கள், செல்வந்தர்கள், ஆன்மீகவாதிகள் ஆரம்பித்தனர். அவ்வகையில், மேனாட்டாரால் ஆரம்பிக்கப்பட்ட கல்விநிறுவனங்களைப் போன்று சுதேசமக்களும் ஆர்வங் காரணமாகவும், ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும் ஆரம்பித்தனர்.
இதன் மூலம் காலப்போக்கில் 'அனைவருக்கும் கல்வி' என்னும் சாத்தியப்பாடு தோன்றலாயிற்று. அரசாங்கங்களும் காலத்துக்கு காலம் வழங்கிய உதவிகளையும் நன்கொடைகளையும் விரிவுபடுத்தி அரச நிருவாகக் கட்டமைப்புக்களை கல்விசார்ந்து நிறுவலாயிற்று.

கற்றவர் தொகை அதிகரித்ததன் பேரில் நூல்களின் பாவனையும் வாசிப்பு கலாச்சாரமும் மேம்படலாயின. கல்விநிறுவனங்கள், சமயநிறுவனங்கள் மட்டுமன்றி தனிநபர்களும் நூல்களைச் சேகரித்து பாதுகாக்கத் தலைப்பட்டனர். தனிநபர்களின் சேகரிப்புகள் அவர்களுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் பயன்பட்டன. சிலர் அவர்களிடம் பெற்றுப்பயன்படுத்துவதன் மூலம் வாசிப்பின் அனுபவத்தைப் பெறலாயினர். இதே சமயம் இலங்கையிலும் இந்தியாவிலும் பலவிதமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் உருவாயின. நாளாந்தம் நடைபெறும் உலகவிடயங்களை அறிதல் என்பதை நாளாந்தக் கடமையாக்குகின்ற முறை உருவாகியது. உலகயுத்தங்களின் தகவல்கள், நாட்டுக்கு நாடு அபிவிருத்திக்கான சிந்தனைகள் உலகநாடுகளை ஒன்றாக இணைக்கத் துணையாயின.
ஏற்கனவே பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஏனைய கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நூலகங்கள் அத்துறை சார்ந்தவர்களுக்குப் பயன்பட்டு வந்தன. இலங்கையில் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக பொதுசன நூலகங்களை அமைக்கத் தலைப்பட்டது.

பதிவுலகில் கட்டபொம்மன்!!!

ஏற்கனவே பதிவுலகில் பராசக்தி உலவுகிறாள். இப்பொழுது பதிவுலகில் கட்டபொம்மனும் வந்துவிட்டார்.
---------------------------------------------------
கட்டபொம்மன்:-
பேஸ்புக், ட்வீட்டர், ஹை5, மைஸ்பேஸ் ஹா. நெற் கணக்சன் இருக்கிறது. குரோமும் இருக்கிறது. உனகாக ஏன் எழுதவேண்டும் பிளாக். என்னோடு நெற்கேவ் வந்தாயா? காசு கொடுத்தாயா? குறோம் அப்பிளிகேசன் டவுண்லோட் பண்ணிதந்தாயா?  பிளாக்கிற்கு வந்தாயா? போஸ்ட் போட கற்றுதந்தாயா?  அங்கு ரெம்பிளோட் மாற்ற கஸ்டப்பட்ட எனக்கு உதவியாவது செய்தாயா?  அல்லது நீ என் பாலோவரா? லைக்கொடுத்தவனா? மரை கழண்டவனே. எதற்கு கேட்கிறாய் பதிவு? யாரைக் கேட்கிறாய் நல்ல பதிவு? என்னை மாதிரி அரைகுறை போஸ்ட் எழுதும் என் நண்பர் கூட்டத்திற்கு லிங் கொடுத்து விடுவேன் ஜாக்கிரதை.


துரை:-
Shut Up. ஹக்கேர் வைத்து உன் ஈமெயிலை இலையான் மொய்க்க வைத்து விடுவேன்.

கட்டபொம்மன்:-
அப்படியா? ஹாஹாஹாஹாஹா
பலே! நீ அனுப்பிய ஹக்கர் மிகவும் புத்திசாலி. என் பிளாக்கை அழிக்கும் நோக்கத்தோடு யாரும் தலை காட்டியதில்லை இந்தப்பக்கம். பிளாக்கின் பெருமை தெரிந்தவன் அவன். ஆனால் இது போன்று கூற இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை. கூறிவிட்டதாக என்முன்னே கூறிய உன்னை இனிமேலும் உயிரோடு விட்டுவைப்பது என் குற்றம். இதே அடுத்த பதிவு எழுத ஆரம்பிக்க போகிறேன். அடக்கு அடக்கு என்று இவனாவது படிக்கட்டும் என்ற முறை தடுக்கிறது.


துரை:-
என்ன அடுத்த பதிவு எழுத போகிறாயா? அது ஆபத்துக்கு அறிகுறி. (உனக்கில்லை!!! எனக்கு) இப்பவே தலை கிர் எங்கிது..


கட்டபொம்மன்:-
என்ன? இப்பவேவா???.

Saturday, November 12, 2011

புலம்பெயர்தமிழருக்கு...



வெளிநாட்டு வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்த தமிழர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன். 


முன்னைய காலத்தில்...
'அம்மா யாரோ வந்திருக்கிறாங்க'
லீவில் வந்த அப்பாவை காட்டி
சொல்கிறான் 4 வயது மகன்...
போட்டோவில் பார்த்த
அப்பாவின் முகம்
மாறியிருந்தது
வெளிநாட்டு ஸ்டைலில்...

இன்றைய காலத்தில்...
அதே அப்பா
அங்க பார்
அங்க பார் என அதட்டும் அம்மா
அருகிலில்லை அப்பா
ஸ்கைப்பில்...
கணீர் குரலும்
கரகரக்கும் குரலாக
கேட்டுவந்த பிள்ளை
லீவில் வந்த அப்பாவிடம்
'என்னப்பா குரல் சரியாயில்லையா?'

நீங்கள் எதிர்பார்த்த படத்தை பெற

ஒவ்வொருத்தருக்கும் அவஅவயின்ர பழைய பாடசாலையின் புகைப்படங்களை காண ரொம்ப ஆவலா இருப்பீங்க. ஆனா அந்த புகைப்படங்கள் உங்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கும். அதற்காகவே மிகப்பெரிய சமூக!!! நோக்குடன் அவரவரின் பாடசாலைகளின் புகைப்படங்களின் கோவையாக காணப்படுகிறது இந்த தளம். இங்கு சென்று நாட்டை தெரிவு செய்து உள்ளே சென்று மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கொடுத்து உள் சென்றால் நீங்கள் எதிர்பார்த்த படம் காணப்படும். கண்டு மகிழுங்கள். 

கடவுள்; துணையிருந்தால் சரியான படத்தை பெறுவீர்கள்.

தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

Thursday, November 10, 2011

தமிழர்களின் பாரம்பரியம் 2

தமிழர்கள் பாரம்பரியம் சொல்லி மாளாத ஒன்று. கலை, இலக்கியம், சிற்பம், சித்திரம் என எல்லாத்துறைகளிலும் சகலகலாவல்லவர்களாக விளங்கியவர்கள் தமிழர்கள். அவற்றில் பல அழிவடைந்து, சிதைவடைந்து விட்டாலும் எஞ்சியவற்றின் புகைப்படங்களே இவை. அவ்வகையில் தமிழர்களின் சிற்ப, கட்டடகலை ஆதாரங்கள் பற்றிய புகைப்படங்கள் உங்களுக்காக. 
சென்ற பதிவில் சிற்ப கட்டட, கலை பொருட்களை பார்த்தோம். இப்பொழுது நகை அலங்காரங்கள், சிற்ப வேலைப்பாடுகளை பார்ப்போம்.
படத்தை எடுத்தவர்கள் யார் என்று என்னால் அறியமுடியவில்லை. ஆனால் புகைப்படத்தை எடுத்தவர்களுக்கே இதன் முழு உரிமையும். படம் எடுத்தவர்களுக்கு நன்றி.