Thursday, February 17, 2011

வரலாறு கண்ணீர் வடிக்கும்..........

இன்று எமது பகுதியில் (யாழ்ப்பாணத்தில்) பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடு வீதி அகலிப்பு. அகலிக்க தான் வேண்டும் ஆனால் நகரிற்கும் வாழிடங்களுக்கும் பிரச்சினை ஏற்படாதவாறு செய்யலாமே. அதிலும் முக்கியமாக வரலாற்று முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் வீதி அகலிப்பை மட்டுப்படுத்துவது நன்மை பயக்கும். எம்மிடம் எஞ்சியருக்கும் வரலாற்று பகுதிகளும் இதன் மூலம் அழிக்கப்பட உள்ளது.
  1. வண்ணார் பண்ணை சிவன் கோவில் பிரார்த்தனை மண்டபம்
  2. சிவத்தொண்டன் நிலையம்
  3. இந்துக்கல்லூரியின் மண்டபம்

இவற்றை விட இடையில் காணப்படும் பண்டைய வீடுகள், தேவாலயங்கள், மடங்கள் அழிக்கப்பட உள்ளன.

வண்ணார் பண்ணை சிவன் கோவில் பிரார்த்தனை மண்டபம்
முன்னைய காலத்திலும் இன்றும் ஆலயம், சந்தை, சந்தி போன்றவற்றை மையமாக கொண்டே குடியிருப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. முன்பிலிருந்தே சிவன் கோவிலை மையமாக கொண்டே அருகிலுள்ள குடியிருப்புகள், கடைத் தொகுதிகள் உருவாகின. 
இவ்வாலயத்தின் பிரார்த்தனை மண்டபம் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டதுடன் முஸ்லீம்களின் கட்டட பாணியில் அமைக்கப்பட்ட கோயில் கட்டடம் என்ற பெருமை பெறுகின்றது. அப்பகுதியில் வீதியில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி அல்லது கோயில் கோபுரத்தினை பின்னகர்த்தி வழி செய்வதை விடுத்து பிரார்த்தனை மண்டபத்தை அழிப்பது தேவையற்றது. 
உண்மையில் கோபுரம் அண்மைய காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒன்று. ஏனெனில் முன்னைய சிவன்கோயில் கோபுரம் 1 அடுக்கு மட்டும் கொண்டது. அதை மாற்றி 2000ம் ஆண்டளவில் புதிய கோபுரம் கட்டப்பட்டது. மேலும் இக்கோபுரத்தில் பீப்பாய் குண்டின் தாக்கத்தால் ஏற்பட்ட வெடிப்பு ஒன்று காணப்படுவதாகவும் கேள்விப்பட்டேன். அவ்வாறெனின் கோபுரத்தை இடித்து புதிய கோபுரத்தை சற்று பின்னகர்த்தி பிரார்த்ததை மண்டபத்தை காப்பாற்றுவது ஆலய சபையின் கடமை.

சிவத்தொண்டன் நிலையம்

சிவத்தொண்டன் நிலையம் யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுதும் பிரபல்யமான ஓர் ஆன்மீக நிலையம். ஆப்பகுதியன் புனிதத் தன்மையை உணர்ந்து அப்பகுதி மக்கள் சிவத்தொண்டன் நிலையத்திற்கு முன்னால் தங்கள் பகுதியில் சிறிது விட்டுக்கொடுத்தால் சிவத்தொண்டன் நிலையமும் புனிதத்தன்மையும் பேணப்படும்.


இந்துக்கல்லூரியின் மண்டபம்

ஆறுமுக நாவலரினால் கட்டப்பட்ட இந்துக்கல்லூரியின் மண்டபம் நூற்றாண்டு கடந்தும் அதேநிலையில் பேணப்பட்டு வருகின்றது. ஆறுமுக நாவலரினால் கட்டப்பட்ட இக்கட்டிடம் மட்டுமே அவர் பெயர் சொல்லி நிற்கின்றது. நாவலருடைய வீடு கூட இன்று அழிவடைந்த நிலையிலிருக்கும் போது இக்கட்டடத்தை தொடர்ந்து பேண எம் கடமை.


வீதி அகலிப்பு வேண்டிய ஒன்றுதான். ஆனாலும் அதன்போது வரலாற்று பகுதிகள், பண்டைய வீடுகள் அழிவடையாது காப்பாற்றுவது மக்களின் கடமை. 
ஒரு வரலாற்று ஆர்வாளனாக எனது கருத்து இது. 
உங்கள் கருத்து என்ன????????

No comments:

Post a Comment